12-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும் உதவித்தொகை, வேலைவாய்ப்புப் பெற உதவவும், உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி என்னும் புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல அன்றைய தினமே பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. 


அதேபோல துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி செல்ல உதவும் வகையில், உயர் கல்வி வழிகாட்டி என்னும் புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


என்ன சிறப்பு அம்சங்கள்?


என்னென்ன படிப்புகள் உள்ளன, மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகைகள், மாணவர்களுடன் கலந்துரையாடல், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.


மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் https://tnschools.gov.in eன்ற இணையதளத்தில் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




என்ன படிக்கலாம்?


மருத்துவப் படிப்புகள், தொழிற்படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், விளையாட்டுப் படிப்புகள், ஆசிரியர் படிப்புகள், திரைப்படத் தொழில்நுட்பப் படிப்புகள் ஆகியவை குறித்தும் அவற்றில் உள்ள உட்பிரிவுகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 


மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் 


தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணையதள முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அவற்றின் அமைவிடங்கள், இணைய முகவரிகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. 


நுழைவுத் தேர்வுகள்


அதேபோல மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி நடத்தப்படும் என்ற விவரங்களும் ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளன. பலரும் பெரிதாக அறியாத பி.எஸ்சி. ஆனர்ஸ் நுழைவுத் தேர்வு, நெஸ்ட் நுழைவுத் தேர்வு, பிஎஸ், புள்ளியியல் நுழைவுத் தேர்வுகள், நாட்டிக்கல் சைன்ஸ் நுழைவுத் தேர்வுகள், பிட்சாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் அறிமுகம், அவற்றுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவித் தொகைகள்


மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை, பொறியியல் மாணவிகளுக்கான பிரஹதி உதவித்தொகை, அறிவியல் மாணவர்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகைகள் குறித்த விவரங்கள் இதில் அளிக்கப்பட்டுள்ளன. 


இவை தவிர உயர் கல்வியில் சேருவதற்கான முன் தயாரிப்புகள், உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியச் சான்றிதழ்கள், சான்றிதழ்களை எப்படிப் பெற வேண்டும் என்பன குறித்தும் இந்தப் புத்தகத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது. 


மாணவர்களுடன் கலந்துரையாடல் 


உயர் கல்வி வழிகாட்டி புத்தகம், மாணவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளும் வகையில் செயல் தாள், உரையாடல்கள் அடங்கிய குறிப்பேடுகளையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. 


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 


இந்தத் தலைப்பின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கையின்போது இயல்பாக எழும் சந்தேகங்கள் கேள்வியாகக் கேட்கப்பட்டு, பதில்களும் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல முதல் தலைமுறை பட்டதாரி, அரசுப் பள்ளி மாணவர்களின் வெற்றிக் கதைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. 


இவை தவிர மாணவர்களை உத்வேகமூட்ட, முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளி மாணவர்களின் வெற்றிக் கதைகளும் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன.


புத்தகத்தைப் படிக்க, தரவிறக்கம் செய்ய:




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண