'தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யாமல், +2 தேர்வு மட்டும் ரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை’ என மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் ’தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள #Covid19 சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது.#NEET’ எனக் கூறப்பட்டுள்ளது. 






முன்னதாக சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தற்போது சற்று கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கினாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இந்தச் சூழலில் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் பிரதமர் மோடியுடன் கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 


இந்நிலையில் அந்த ஆலோசனையின் முடிவில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த முடிவு தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு" எனப் பதிவிட்டிருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இதுகுறித்து தெளிவாக விவாதித்தனர். அதில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் ஊரடங்கு நீடிக்கிறது. எனவே இந்தச் சூழலில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. 






மேலும் கடந்த ஆண்டை போல் இம்முறையும் மாணவர்கள் சிலர் தேர்வு எடுக்க விரும்பினால் அவர்களுக்கு நிலைமை சரியான பிறகு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உரிய அறிவிப்பை விரைவில் கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.  மேலும், "தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்" எனவும் கூறியிருந்தார். 

Also Reads: ப்ளஸ்-2 தேர்வுகள் - தொடரும் குழப்பம்.. சர்வே நடத்த உத்தரவு!