சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கனல் கண்ணன். இவர் தற்போது இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
அதில் கிறிஸ்தவ மதபோதகர் உடையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் வைத்து எடிட் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது. அதில், ‘வெளிநாட்டு மதத்தின் கலாச்சாரம் இதுதான்’ என கனல் கண்ணன் குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இந்த பதிவு தொடர்பாக ககன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவிலில் உள்ள சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பிரிவுகளின் கீழ் கனல் கண்னன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார்.அப்போது மதியம் 2 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் உள்நோக்கத்தோடு கனல் கண்ணன் காக்க வைக்கப்பட்டதாகவும், விசாரணை நடத்தப்படாமல் இருப்பதாகவும் கூறி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கனல் கண்ணனை வெளியே அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து சாப்பிட வெளியே சென்ற போது மீண்டும் போலீசார் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மீண்டும் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.