தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்சியின், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக கைதாகக் கூடியவர்கள் பாஜகவினர் தான். அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் கொலை, ஊழல், ரவுடிசம் மலிந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் வர மறுக்கிறார். ஆனால் ஈசா யோக மையத்திற்கு வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான மருத்துவமனையை விட, ஈசா யோக மையம் அவ்வளவு முக்கியமானதில்லை. இதற்கு பின் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அரசும், ஆளுநரும் வெவ்வேறு பக்கம் இருந்தால், அது மக்களுக்கு தான் பாதிப்பு. ஒரு அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் மீது, புகாரளிக்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு. இதை கேட்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆளுநர் என்ன? அண்ணாமலையின் கையாளா?. அண்ணாமலையின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். ஆனால் அதில் சில வரையறைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது விவகாரத்தில், கர்நாடகவில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நிற்கின்றனர். தற்போது இருக்கிற துணை முதலமைச்சர் சிவக்குமார், அணைக் கட்டுவதற்கு தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் வழங்கப்படும் நீர் பங்கீடு குறித்து ஆணையமே தெரிவித்துள்ளது. இதில் பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை. அவ்வாறு மேகதாதுவில் அணைக் கட்டினால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையில், அரசு தலையிடுவதில்லை. இது பெரும் வியாபாரிகளால் நடத்தப்படுவதால், விலையேற்றத்திற்கு காரணம். இதனால் பொதுமக்களுக்கு விலை அதிகமாகவும், விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவும் கிடைத்து வருகிறது. பாலை அரசு கொள்முதல் செய்வது போல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்தால் மட்டுமே விலையை ஈடு செய்ய முடியும். கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது, காவல் துறையில் மன அழுத்தம் இருக்க வாய்ப்பில்லை. வெளியில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கலாம். ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.