நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் செல்லப்பன்.  இவர் புதுச்சத்திரம் அரசு பள்ளியில்  வரலாற்று ஆசிரியராக கடந்த 12  வருடங்களாக இந்தப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி மாணவர்களுக்கு வரலாற்று பாடம் நடத்தி வந்தபோது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் 2 பேர் திரைப்படப் பாடலுக்கு நடனமாடினர். அவரை நடுவிரலை காட்டி கொச்சைப்படுத்தும் விதமாக மாணவர்கள் டிக் டாக் செய்துள்ளனர். இதை வீடியோவில் பதிவு செய்த மாணவர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ கடந்த நான்கு நாட்களாக வைரலாக பரவி வந்த நிலையில் மாணவர்களின் நடத்தை குறித்து ஆசிரியர் பல முறை தலைமை ஆசிரியர் குனசேகரனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இம்முறை மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் வீடியோவாக வெளியே வந்துவிட்டதால், இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கூட்டத்தை கூட்டி தலைமை ஆசிரியர் குனசேகரன் விவாதித்தார்.



அதனை தொடர்ந்து ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் பெற்றோரை அழைத்து 3 பேரின் டிசியை (மாற்று சான்றிதழை) தலைமை ஆசிரியர் குணசேகரன் வழங்கினார். இதனை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், மாணவர்களுக்கு டிசி வழங்கப்பட்டதை உறுதிபடுத்தினர். எனினும், அம்மூன்று மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளியில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்தபோது "இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கமாக இருப்பதில்லை. பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் மாணவிகளை கிண்டல் செய்வதும் அதிக சத்தம் எழுப்பிக்கொண்டு வருவதும், கிண்டல் செய்வதுமாக  ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை தலைமையாசிரியர் குணசேகரனிடம் கூறியும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்குள் செல்போன் அனுமதிக்கக் கூடாது என்ற நிலையில் அங்கு உள்ள ஆசிரியர்களும் மாணவர்களை சோதிக்காமல் செல்போனுடன் உள்ளே அனுமதித்திருப்பது மாணவர்களை தவறான வழிகளுக்கு இழுத்து செல்கிறது. மேலும் கொரோனா காலத்தில் பள்ளியில் நடத்தப்படும் வகுப்புகளில் மாணவர்கள் யாரும் முகக்கவசம் அணிய வில்லை என்பது இந்த வீடியோவில் காண முடிகிறது. இது சம்பந்தமாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினர்.