கரூர் அருகே பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் சீருடை அணிந்து ஊர் மந்தையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வெள்ளியணை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து வெள்ளியணை அரசு பள்ளி 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.





 


வெள்ளியணையில் இருந்து வீரணம்பட்டி வரை செல்லக்கூடிய தனியார் பேருந்து ஒன்று வரும். ஆனால், அந்த பேருந்தில் கூட்டம் குறைவாக உள்ள காரணத்தினால், இரண்டு நாட்களாக வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்குச் செல்லாமல் சீருடை அணிந்து ஊர் முன்பு மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாகவும் இன்று விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள் எங்களுக்கு தற்காலிக பேருந்து வசதி வேண்டாம் எனவும், நிரந்தரமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அரசு பேருந்து ஒன்றை இந்த வழித்தடமாக நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குப் புறப்பட்டு சென்றனர். மேல்நிலை வகுப்பு படிக்கும் வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் தம்பி, தங்கைகளான ஆரம்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அவர்களுக்கு துணையாக அதே ஊரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


 



 


பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை


வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி கஸ்தூரி கூறுகையில்,  “எங்கள் ஊரில் என்னை போன்ற பெண் பிள்ளைகளை உள்ளூரில் தொடக்க கல்வி அளவு மட்டுமே படிக்க வைத்து, பின் நிறுத்திவிடுவார்கள். சில ஆண்டுகளால் தான் மேல்நிலை கல்வி கற்க, ஊரை விட்டு வெளியே அனுப்புகின்றனர். அதுவும் உள்ளூரில் பேருந்து ஏறி பள்ளிக்கு அருகிலேயே இறங்கி, பள்ளிக்கு செல்வதால் தான் எங்கள் பகுதி கல்வியில் மிகவும் பின் தங்கிய பகுதியாகும். மேலும், குழந்தை திருமணம் அதிகம் நடக்கும் பகுதி. இதனால், இதிலிருந்து மீண்டு விழிப்புணர்வு பெற கல்வி பெறுவது என்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்கு அவசியமாகும். சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் சென்று வர வேண்டும் என்றால் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என கருதி பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, எங்கள் கல்வி தொடர அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும்” என்றார்.


குழந்தைகளை ஆடு, மாடு மேய்க்க அனுப்பி விடுவோம்


மேட்டுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.பி. ராஜேந்திரன் கூறுகையில், “இந்த பகுதியில் இருந்து தற்போது தான் அதிகப்படியான மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி கற்க வெள்ளியணைக்கு அனுப்புகிறோம். முன்பெல்லாம் தொடக்கக்கல்வி முடிந்தவுடன், குழந்தைகளை ஆடு, மாடு மேய்க்க அனுப்பி விடுவோம். அதற்கு காரணம் குழந்தைகள் பாதுகாப்பாக எங்களுடன் இருக்க வேண்டும் என்பதால் தான். தற்போது பேருந்து வசதி இருப்பதால், பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவதாக நாங்கள் உணர்கிறோம். 4 கிலோமீட்டர் நடந்தோ, சைக்கிளிலோ சென்று வருவது தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திவிடும். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து நீண்ட நாள் கோரிக்கையான எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்” என்றார்.


 



 




10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.


கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,  நடைபெற்ற முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, அக்டோபர் 31ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.