தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. மேலும், நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா?
இந்த நிலையில், நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் விதமாக நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், தற்போது அது போன்று அரசாணை வெளியாகி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மை இல்லை.
புற்றுநோய்போன்ற தீராத வியாதி உள்ள நோய் உள்ள நாய்களையும், கால்கள் அடிபட்டு வாழ்வதற்கு மிகவும் சிரமப்படும் நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், இது கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. வாழவே முடியாமல் சிரமப்பட்டு இனி காப்பாற்ற இயலாது என்ற நிலையில் உள்ள நாய்களை மட்டுமே கருணை கொலை செய்வார்கள்.
எப்படி நடக்கிறது இந்த கொலை?
அதுவும் நாய்களை துன்புறுத்தி கருணை கொலை செய்யக்கூடாது என்று அரசு விதிகளில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. முறையான கால்நடை மருத்துவர்கள் முன்பு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அதன் இதயத்துடிப்பை இழக்கச் செய்தே நாய்களை கருணை கொலை செய்கின்றனர். தனிநபர்கள் நாய்களை கொலை செய்வதற்கு இந்திய அரசியலமைப்பில் எந்தவித இடமும் இல்லை.
அரசால் முறையாக அனுமதி பெற்ற கால்நடை மருத்துவர் மட்டுமே கருணை கொலை செய்ய முடியும். ஒரு நாய் கருணை கொலை செய்யப்படுவதற்கு முன்பு பஞ்சாயத்து, மாவட்ட காவல்துறை மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர், அப்பகுதியில் உள்ள பிராணிகள் நல வாரிய அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவின் அனுமதி பெற்று, அவர்கள் ஆய்வு செய்த பின்னரே கருணை கொலை செய்ய இயலும்.
புதிய கொள்கைகள்:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சாலைகளில் மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசின் சார்பில் புதிய கொள்கை ஒன்று அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது.