தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தல் அரங்கேறிய நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் என மாறியுள்ளது.
விஜய்யின் அரசியல்:
இதில் பலர் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமே ஆகும். விஜய்யின் செயல்பாடுகள் மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. இது அவருக்கு தேர்தலில் பலமாக மாறுமா? பலவீனமாக மாறுமா? என்பது தேர்தல் முடிவில்தான் எதிரொலிக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளில் உதவி இல்லாமல் ஆட்சி அமைப்பது இனி அசாத்தியமான ஒன்றாகும். இதை நன்றாக உணர்ந்துள்ள விஜய் கடந்தாண்டு தான் நடத்திய முதல் அரசியல் மாநாட்டிலே வெளிப்படையாக மற்ற கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை வெளிப்படையாகவே அவர் அழைப்பு விடுத்தார்.
கூட்டணிக்கு வர தயங்கும் கட்சிகள்:
ஆனால், விஜய்யின் பக்கம் கூட்டணிக்குச் செல்ல திருமாவளவன் ஆர்வம் காட்டாமல் திமுக பக்கமே நீடிக்கிறார். முக ஸ்டாலினும் தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதுடன் கூட்டணியை மேலும் பலப்படுத்தவே விரும்புகிறார். ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக வந்தால் மட்டுமே விசிக வெளியேறும். அப்போது வேண்டுமானால் அதிமுக பக்கம் பாஜக இருப்பதால் விஜய்யுடன் அவர் கூட்டணி சேர வாய்ப்பு உண்டு.
அதிமுகவோ பாஜக-வை தங்கள் கூட்டணியில் இருந்து நீக்கிவிட்டு விஜய்யை உள்ளே கொண்டு வர ஆர்வம் காட்டி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தமிழ்நாடு வந்த மோடியுடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்றே கருத வைக்கிறது.
இதனால், விஜய் அதிமுக கூட்டணியில் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதாக தற்போதுள்ள சூழல் காட்டுகிறது. இதனால், விஜய் கூட்டணி பக்கம் எந்த கட்சியினரும் செல்ல ஆர்வம் காட்டாமலே இருந்து வருகின்றனர். விஜய் - ராகுல்காந்தியை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானாலும், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வுடனான நீண்ட கால நட்பு, நெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் திமுக பக்கமே நிற்கும் என்றே கூறப்படுகிறது.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
தற்போதுள்ள அரசியல் சூழலில் விஜய்யும் பொதுவெளியில் அவ்வப்போது மட்டுமே எட்டிப்பார்த்து வருகிறார். கடைசியாக அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய விஜய் அதன்பின்பு பொதுவெளியில் தலைகாட்டவே இ்ல்லை.
அரசியலில் அடிக்கடி குரல் கொடுக்காமல் அமைதி காத்து வரும் விஜய் அடுத்த மாதம் மதுரையில் நடக்க உள்ள பிரம்மாண்ட அரசியல் மாநாட்டில் என்ன பேசப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. மேலும், கூட்டணிக்கு யாருமே வராமல் இருக்கும் சூழலில் நடிகர் விஜய் என்ன செய்யப்போகிறார்? என்பதே கேள்வியாகும்.
ஓபிஎஸ் கை கோர்க்கிறாரா?
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்த ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சியும் தோல்வியில் முடிய, அவர் புதுக்கட்சி தொடங்கி விஜய் பக்கம் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் செல்வாக்கு மிகவும் மோசமான சூழலில் உள்ளதால் அவர் விஜய் பக்கம் செல்வதால் ஏதும் மிகப்பெரிய தாக்கம் அரசியலில் ஏற்படும் என்றும் கூற இயலாது.