சென்னை திரிசூலம் அருகேயுள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பல்லாவரம் - திரிசூலம் அருகே உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் கல் வீச்சி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா சீடர் பிரபானந்தா அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


அதிபர் நித்யானந்தா 


கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா பாலியல் வழக்கு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கிய 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தலைமறைவானார். இதன்பின்னர் கைலாசா என்ற தனி நாட்டை உருவாகியுள்ளதாக அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது காட்சிக் கொடுக்கும் நித்யானந்தா இதுவரை எங்கே இருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 


ஆனால் கைலாசா நாட்டின் கொடி, சின்னம், நாணயம் என பலவற்றையும் வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்திய நித்யானந்தா கடந்தாண்டு செப்டம்பரில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் சமாதி நிலை அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தனக்கு எதுவுமில்லை என அவர் கைப்பட எழுதிய கடிதம் வெளியான பிறகே நித்தியின் சீடர்கள் நிம்மதியடைந்தனர். 


அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்ததாக ஜனவரி 11 ஆம் தேதி நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில், உலகம் முழுவதுமுள்ள நித்தியின் ஆசிரமத்தில் பணிகள் வழக்கம்போல நடந்து தான் வருகிறது. இந்நிலையில் தான் இந்த கல்வீச்சு சம்பவம் நித்யானந்தாவின் சீடர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.