இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் மிக முக்கியமானதாக இருக்கும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்கவேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று அந்த மனுவில் வேதாந்தா தெரிவித்திருந்தது.








ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த அந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்’ என்று தெரிவித்தார். 

 

இதனை தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.