தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 19ம் தேதி அன்று தமிழக அரசு பொது விடுறையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 136 நகராட்சிகள் மற்றும் 460 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 546 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தலுக்கான (Ordhary Elections) வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, தேர்தல் நடைபெறவுன்ன அணைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19-02-2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிக்கை 09.02.2022ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக காணொலிக் காட்சி வாயிலாக இன்று பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார். மாநிலத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான முதலீடுகள் பெறப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்தார். அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும்51 வேட்பாளர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி 57- வதுவார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ’இந்திராணி பொன்வசந்த்’ அவர்களை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்குள்ள முனியாண்டி கோயிலில் வரவேற்பு மற்றும் வழிபாட்டிற்கு பிறகு அங்கு திரளாக கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும் போது, ”எங்கெல்லாம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறதோ அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக திகழும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்