கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மத்தேயு வரவு செலவு அறிக்கையைச் சமர்பித்தார்.
மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்- கரூர் மாவட்டம், குளித்தலை கல்வி மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் 17ஆ நடவடிக்கைக்கு உள்ளான இடைநிலை ஆசிரியர் ஒருவரது பெயர் நடந்து முடிந்த பொதுமாறுதல் கலந்தாய்வின்போது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் (Promotion Panel) விதிகளுக்கு புறம்பாக கரூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால் வைக்கப்பட்டது. அதன்படி கல்வித்துறை அலுவலர்களின் அழைப்பின் பேரில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பந்தப்பட்ட ஆசிரியர்க்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படவில்லை. அவர் பதவி உயர்வும் பெறவில்லை. இந்நிலையில் கலந்தாய்வில் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலரால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலரும், கடவூர் வட்டாரக்கல்வி அலுவலரும்தான். தவறு செய்த குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலரை இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டதை எதிர்த்து நடந்த 11.04.2022 அன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் காரணமாக ஆசிரியரின் தற்காலிக பணியிடை நீக்கம் குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலரால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நியாயத்திற்காக போராடிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 7 பேரை அன்றே தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. இது மிகப்பெரிய அநீதியாகும். நடந்த தவறைச் சரி செய்யக்கோரி மாவட்டக்கல்வி அலுவலரிடம் பலமுறை சங்கத்தின் சார்பில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கரூர் மாவட்ட கல்வித்துறையின் இந்த ஆசிரியர் விரோத நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்விதுறை இயக்குநர் ஆகியோர்களிடம் நேரில் கடிதம் அளித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
7 பேரின் தற்காலிக பணியிடை நீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் 16.05.2022 தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பேரணி நடத்தி, பெருந்திரள் முறையீடு செய்வது என மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக CPS ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கிட வேண்டும், 01.01.2022 முதல் மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும், கடந்த பொது மாறுதல் தேவைப்பணியிடங்களுக்கு (Need Post) மாறுதலில் சென்ற தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. இதை உடனடியாக சரி செய்திட வேண்டும்.
தொடக்கக்கல்வித்துறையில் நடைபெறாமல் உள்ள மாவட்ட மாறுதல், மனமொத்த மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். TNSED இணையத்தில் ஆசிரியர்களை நாள்தோறும் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ளக் கூறுவதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும். இணைய வசதியின்மை, தொழில் நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இணையத்தில் பதிவுகள் மேற்கொள்ளாத சூழலில் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.