தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம்15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கபட்டிருந்தன. ஆனால் தமிழகம் முழுவதும் இன்னும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது நடத்தப்படாமலேயே உள்ளது. 


இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும், மாவட்ட செயலாலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்