16-ஆவது சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் மீதான தீர்மானத்தின் மீதான முதல்வரின் பதிலுரையில் பேசிய மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் ஒருங்கிணைந்து வாழும் வகையில் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் ஏற்கெனவே உள்ள சமத்துவபுரங்களையும் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமத்துவபுரம் என்றால் என்ன?



தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி வருகிறது. 1998ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு பின்னர் இத்திட்டத்திற்கு பெரியார் நினைவு சமத்துவபுரம் என பெயரிடப்பட்டது. இந்த குடியிருப்பு பகுதிகளில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரம் பகுதிகளில் எல்லா சாதியினருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. நூறு வீடுகள் உடன் உருவாக்கப்படும் சமத்துவபுரங்களில் 40 வீடுகள் தலீத் மக்களுக்கும் 25 வீடுகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எஞ்சியுள்ள வீடுகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மற்ற சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டு வருகிறது. 


கடந்த 2006-11 திமுக ஆட்சிகால கட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்து வந்த அதிமுக ஆட்சியால் பத்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் சரவர செயல்படுத்தப்படவில்லை என திமுகவினரால் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் எனவும் ஏற்கெனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.