உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (24-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.
இதன் தொடர்பாக பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிப்பதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மேலும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெளிவுபடுத்துகையில், “வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ இடமாற்றம் செய்யவோ அல்லது இடம் அளிக்கவோ தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எந்த அனுமதியும் வழங்கவில்லை” என குறிப்பிட்டது.
குறிப்பிட்ட மாநிலத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், மாணவர்களின் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து மீண்டும் ஒரு முறை சுட்டிகாட்ட விரும்புகிறேன். போர் தொடக்கத்திலிருந்து, உக்ரைனில் இருந்து சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
இது நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒன்றாகும். உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையில், இந்த மருத்துவ மாணவர்கள் உடனடியாக உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கலாம். போர் நிறுத்தப்பட்ட பின்னரும் நிச்சயமற்ற தன்மை நிலவும்.
இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்களை இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளில் உள்ள பொருத்தமான பல்கலைக்கழகங்களிலோ சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து மாணவர்களை உக்ரைனிலிருந்து மீட்பதற்கு மத்திய அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசு அத்தகைய உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததால் மாணவர்கள் மத்தியில் ஏமாற்றம் உள்ளது.
எனவே, இந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர, சம்பந்தப்பட்ட மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு என்எம்சி மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்