சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அதுகுறித்து ஆட்சியரும் வட்டாட்சியரும் விளக்கம் அளித்துள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் ஒன்றான குரூப் 4 தேர்விற்கு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் 80 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.  இதில் 23 ஆயிரத்து 951 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். 


தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்காக ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 80 தலைமை கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும் படை அலுவலர்கள், 16 சுற்றுக்குழு அலுவலர்கள், 80 ஆய்வு அலுவலர்கள், 84 வீடியோ கிராபர்கள் ஆகியோர் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதி ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. 


மாற்றுத்திறனாளி மாணவர்களும் எழுதுகின்றனர்


தேர்வு எழுதுபவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதியும். அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான  வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் சீட்டுகள் அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டு மாணவர்கள், இளைஞர்கள் எவ்வித சிரமமின்றி ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். மயிலாடுதுறை புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் வரலாறு முதுநிலைப் பட்டதாரி மாற்றுத்திறனாளி முத்து மாணிக்கம் என்ற தேர்வர் குரூப் 4 தேர்வில் உதவி எழுத்தர் மூலம் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகிறார்.




6 நிமிடத் தாமதம்


இதற்கிடையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகம் என்பதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 6 நிமிடம் தாமதம் ஆனதால் தேர்வெழுத எழுத அனுமதி மறுத்துள்ளனர்.


இதைத் தொடர்ந்து தேர்வாளர்கள் தங்களைத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்டனர். அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். தொடர்ந்து அவ்வழியாக வந்த சீர்காழி வட்டாட்சியரை முற்றுகையிட்டு 6 நிமிடத் தாமதத்திற்கான காரணங்களைத் தேர்வாளர்கள் கூறினர். 


ஆட்சியர் விளக்கம்


அவரும் டிஎன்பிஎஸ்சி தெளிவாக கூறியுள்ளது. ஒரு நிமிடம் கால தாமதம் என்றாலும் அனுமதி இல்லை எனக் கூறிச் சென்றார். அதேபோன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தேர்வு மையத்தை ஆய்வு செய்தபோது செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டதற்கு, டிஎன்பிஎஸ்சி கூறியுள்ள வழிகாட்டுதலின்படி ஐந்து நிமிடத் தாமதம் என்றாலும் அது தாமதம்தான். அதனால் தேர்வர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.


இதுகுறித்துத் தேர்வு எழுத முடியாமல் போன தேர்வர்கள் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தேர்வு நடைபெறவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு தேர்வுக்குத் தயாராகினோம். இந்நிலையில் பள்ளி பெயர் குளறுபடியால், ஐந்து நிமிடத் தாமதத்திற்காக எங்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. எங்கள் வாழ்க்கையில் அதிகாரிகள் விளையாடிவிட்டனர்'' என வேதனையுடன் தெரிவித்தனர்.