தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை
தமிழக அரசு பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. சுமார் 28 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் நாம் மூலமாக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிகட்சமாக மகளிர் உரிமை தொகை கேட்டு தான் அதிகமானவர்கள் மனு கொடுத்திருந்தனர். எனவே தகுதி உள்ள மகளிர் அனைவருக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அப்படி எல்லாம் வழங்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி நெருக்கடியை ஓரளவு சரி செய்ததும் மகளிர் உரிமை தொகை கொடுக்க தொடங்கவிட்டோம். அப்போதும் தெரிவித்தார்கள் இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் என கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக 27 மாதங்களாக மகளிர் உரிமை தொகை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் எதற்கு என சிலர் பேசுகிறார்கள். இது எனது சகோதரிகளுக்கு அண்ணன் கொடுக்கும் சீர், இது உதவி தொகை இல்லை- உரிமை தொகை, யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள். உறுதியோடு கூறுகிறேன் தகுதியுள்ளவர்களுக்கு நிச்சயமாக விரைவில் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கான புதிய அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் படி,
புதுக்கோட்டைக்கான சிறப்பு திட்டங்கள்
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்
- கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
- புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும். * கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.
- கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.