தொழில் நுட்ப வளர்ச்சி
நாளுக்கு நாள் தொழில் நுட்பம் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் மேலோங்கி செல்கிறது. அந்த வகையில் , போக்குவரத்து துறைகளிலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய வாட்ஸ் - அப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயன்பாட்டில் உள்ளது. இதே போல் அரசு பேருந்துகளிலும் நடைமுறை படுத்தப்பட இருக்கிறது.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்ட சூழலில், இப்படியான டிஜிட்டல் வசதிகள் பயணத்தை மேலும் எளிமையாக்கும். TNSTC, SETC பேருந்துகள் மூலம் நாள்தோறும் 6,000 - க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
டிஜிட்டல் சேவை வசதிகள் விரிவாக்கம்
சாதாரண பேருந்துகள், டீலக்ஸ், ஏசி, ஸ்லீப்பர் எனப் பல்வேறு வசதிகளை கொண்ட பேருந்துகள் அடங்கும். ஒவ்வொரு நாளும் சராசரியாக 17,976 டிக்கெட்களும், மாதந்தோறும் 5.87 லட்சம் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்படுகின்றன.
இதில் 85 சதவீத டிக்கெட்கள் ஆன்லைன் வாயிலாக, மொபைல் தளங்கள் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். எஞ்சிய 15 சதவீதம் மட்டுமே டிக்கெட் கவுன்ட்டர்கள், நேரடி சேவை மையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. எனவே டிஜிட்டல் வசதிகளை விரிவாக்கம் செய்வது பயனுள்ளதாக அமையும்.
போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம்
தற்போதைய சூழலில் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், இ-சேவை மையங்கள், மொபைல் ஆப் , ஏபிஐ அடிப்படையிலான போர்டல்கள் உள்ளிட்டவற்றின் மூலம் பேருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகங்கள் (TNSTCs), மாநில விரைவு போக்குவரத்து கழகம் (SETC), சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) ஆகியவை கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மொபைலிட்டி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கார்ப்பரேஷன் (TNMLC) டெண்டர் கோரியுள்ளது.
அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு எளிது
ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டத்தையும், பல்வேறு Payment Gateway சர்வீஸ்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு என்பது மிகவும் எளிதாகி விடுகிறது. கையில் ரொக்கமாக அளிக்க தேவையில்லை. விரைவான புக்கிங் செய்யலாம். நேரம் மிச்சம். ஆன்லைன் பிளாட் பார்ம்கள் மூலம் முன்பதிவு செய்வதன் மூலம் சில சலுகைகளும் கிடைக்கின்றன.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பயணிகளுக்கு பெரிதும் வரப் பிரசாதமாகவே இருக்கும் என்கின்றனர். வாட்ஸ்-அப் டிக்கெட் முன்பதிவு வசதி பயன்பாட்டிற்கு வந்து விட்டால் மொபைல் ஆப் எதுவும் install செய்ய தேவையில்லை. புதிதாக மொபைல் புரசவுருக்கோ அல்லது வேறு தளங்களுக்கோ போக வேண்டியதில்லை.
வாட்ஸ் அப்பில் டிக்கெட் முன்பதிவு
தினசரி பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப்பிலேயே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்துவதற்கு டெபிட், கிரெடிட் கார்டுகள், கியூ-ஆர் கோடு சேவைகள், வேலட்கள், கூகுள்பே, போன்பே, வாட்ஸ்-அப் பே போன்றவை பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்-அப் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் , ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் 24 மணி நேரமும் உதவும் வகையில் உதவி மையங்கள் செயல்படும் என கூறப்படுகிறது.