சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி, கேரள, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


8 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி:


இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உள்பட நாட்டின் எட்டு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சீனியாரிட்டி அடிப்படையிலும் பிராந்திய மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் கொலிஜியம் பரிந்துரை அமைந்துள்ளது.


அந்த வகையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஸ்ரீராம் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


 






யார் இந்த ஸ்ரீராம் ராஜேந்திரன்?


மும்பையில் பிறந்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மையில் பி.காம், மும்பை பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முடித்தவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எல்.எல்.எம். முடித்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஜூலை 3ஆம் தேதி, மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.


கடந்த 2013ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.