புகழ்பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலுக்குள் பூஜை போட வந்த புதிய கார் கோயிலுக்கு உள்ளே நுழைந்து விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.



கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர்(42) என்பவர் தான் வாங்கிய புதிய மாருதி சுசுகி ஈகோ வாகனத்தை பூஜை போடுவதற்காக குடும்பத்துடன் எடுத்து வந்து கோயில் முன்பாக நிறுத்தினார். பின்னர் கோயில் உள்ளே சென்று பூஜைகள் மற்றும் தரிசனம் முடித்துவிட்டு தனது வாகனத்தை எடுக்க முற்பட்டபோது சுதாகர் தவறுதலாக பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் திடீரென கட்டுப்பட்டை இழந்து கோயில் உள்ளே நுழைந்து மண்டபத் தூணில் இடித்து நின்றது. இதனைக் கண்ட சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கோயிலுக்குள் இருந்த பணியாளர்கள் காருக்குள் இருந்த சுதாகரை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக சுதாகருக்கு ஏதும் ஆகவில்லை. புதிய சொகு கார் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புதிய, பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.