கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13.7.2022 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பைத் தொடர்ந்து,  இறப்பிற்கு நீதி கேட்டு அங்கு போராட்டம் பூதாகரமாக தொடங்கியது. ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டு, சுமார் 13க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.


இந்த நிலையில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி  சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணைகள் முடிந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மாதம் விசாரணையை முடித்து 1200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.


மாணவி இறப்பு குறித்த 1200 பக்கம் கொண்ட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில் வண்டிமேட்டிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்திலும், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில்  மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த 1200 பக்க குற்றப்பத்திரிகையின் நகலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீ மதியின் தாயார்  செல்வி பெற்று கொண்டார்.


அதன் பின் பேட்டியளித்த ஸ்ரீமதியின் தாயார் செல்வி, இவ்வழக்கில் முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட கிர்த்திகா, ஹரிபிரியா ஆகிய இருவரும் இவ்வழக்கில் இருந்து நீக்கியுள்ளதாகவும் இவ்வழக்கில் ஏன் போலீசார் இவர்களை  நீக்கவேண்டுமென என கேள்வி எழுப்பினார். குற்றவாளிகளை நீக்கியதன் மூலம் போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் இவ்வழக்கில் ஒரு தலை பட்சமாக சிபிசி டி  போலீசார் செயல்படுவதாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி குற்றச்சாட்டினார். மேலும் இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதால்  தனி நீதிபதி கொண்டு இவ்வழக்கினை விசாரனை செய்ய வேண்டுமென  வலியுறுத்தியுள்ளார்.


தமிழ்நாட்டை உலுக்கிய இச்சம்பவம் இன்று காற்றில் தூவப்பட்ட பொறி போல இந்த வழக்கு காணாமல் போய் உள்ளது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தில் அவரது உடல் புதைக்கப்பட்ட மயானத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. மணிமண்டபத்தில் "உன்னோடு சேர்ந்து நீதியும் உள்ளே புதைந்து உள்ளது.." என்ற வாசகம்  பொறிக்கப்பட்டுள்ளது.