வாழும் கலை (Art of Living) அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று காலை மோசமான வானிலை காரணமாக ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஏதுவாக மாறியதை அடுத்து, ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டது. அதில், ஏறி தனது பயணத்தை ரவிசங்கர் மீண்டும் தொடங்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்.எச். கிருஷ்ணனுண்ணி கூறுகையில், "ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். வானிலை சீரடைந்த பிறகு ஹெலிகாப்டர் புறப்பட்டது" என்றார்.
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில், ரவிசங்கர் ஹெலிகாப்டர் அருகே தனது ஆதரவாளர்களுடன் நின்று அங்கு கூடியிருந்த உள்ளூர் மக்களுடன் உரையாடுவதைக் காணலாம்.
கடம்பூர் அருகே உள்ள ஒக்கியம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தனியார் ஹெலிகாப்டர் காலை 10:30 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் அப்பகுதி மக்களுடன் உரையாடிய பின்னர், காலை 11.15 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு ரவிசங்கர் புறப்பட்டு சென்றார்.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக Art of Living அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து காங்கேயத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ ஆந்திரா கபாலீஸ்வரர் ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்று கொண்டிருந்தார்.
மோசமான வானிலை காரணமாக உகினியத்தில் ஹெலிகாப்டரை நிறுத்த விமானி முடிவு செய்தார். ரவிசங்கர் மற்றும் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு சென்றடைந்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு, முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர்.
மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.