நாகை மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை  அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.  


இந்நிலையில் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கைது நடவடிக்கையின்போது மீனவர்களின் விசை படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் மீண்டும் தொழில் தொடங்க முடியாத நிலை ஏற்படுவதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கைது நடவடிக்கை தடுக்கும் வகையில், நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.


கடந்த மாதம் இதே போல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 19 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.