முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம். 




முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபு சங்கர்,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,




வருகின்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி- (2022 – 23) மாதங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக அரசின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடத்திடவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுதிறனாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.



பொது பிரிவினர் 15 வயது முதல் 35 வரை கலந்து கொள்ளலாம், பள்ளி மாணவ, மாணவியர்கள் 12 வயது முதல் 19 வயது வரை மாவட்ட மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம், கல்லூரி மாணவ,மாணவியர்கள் (கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப பயிலகங்கள்)  உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 17 வயது முதல் 25 வயதுடையோர் மாவட்ட மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம், மாற்று திறனாளர்களுக்கு வயதுவரம்பு இல்லை, அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை .



மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பொது பிரிவினர், மாற்றுத்திறனாளர்கள், மாணவ, மாணவியர்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் www.sdat.tn.gov.in என்ற இணையதள வாயிலாக மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதற்கு எளிதாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 




மாவட்ட அளவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு மாநில அளவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். அதில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெரும் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும்,  இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநில அளவில் ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்கள் பெறும் முதல் மூன்று இடங்களை பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். 


அதிக அளவில் பதக்கங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளில்  உடற்கல்வி ஆசிரியர், பயிற்றுனர்களுக்கு தமிழக அரசின்  சிறந்த பயிற்சியாளர், சிறந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் .த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.


மேலும்,  விளையாட்டுப் போட்டிகளை எந்தெந்த விளையாட்டு மைதானங்களில் நடத்துவது, சிறந்த நடுவர்களை நியமிப்பது, கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுப்பது, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்துவதை கண்டறிதல், போட்டிகளை எவ்வாறு நடத்துவது என திட்டமிடல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்,  கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் மோகன், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், மருத்துவத்துறை, உடற்கல்வித்துறை, மாநகராட்சி துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.