முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் 4- வது தனியார் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நெல்லை வண்ணார்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன்  தலைமையில் நடந்தது. இதில் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். 


”அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை மிரட்டினார்கள்"


அதனைத்  தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தமிழக அரசு ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. நெல்லை  மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் இந்த முகாம் மூலம்  வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர்.


மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தொழில் அதிபர்களை குறி வைத்து, அவர்களுக்கு முதலில் நூல் விடுவது பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசுவது குறிப்பிட்ட தொகையை வாங்குவது இப்படித்தான்  நடந்து வருகிறது. என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள்.


பகீர் கிளப்பிய அப்பாவு


ஒரு முறை, நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். ஒன்றிய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்ய சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91 ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆறு வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.


ஆனால் ஆளுநர் அவர்கள் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் இது மதச்சார்புடைய நாடு இந்தியா என  பேசி வருகிறார்”  என்று கூறினார் 


பின்னணி என்ன?


திண்டுக்கலில் அரசு மருத்துவர் ஒருவரிடம் 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அமித் திவாரியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. 15 கி.மீ தூரம் விரட்டி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இரவோடு இரவாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது. இதனை அடுத்து,  அங்கித் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.