பருவமழை:


தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


கடந்த சில தினங்களாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் இதற்கு மிக்ஜம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


இந்த மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இந்நிலையில், புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை  இன்று (டிசம்பர் 2) சந்தித்தார்.


தயார் நிலையில் மின்கம்பங்கள்:


அப்போது பேசிய அவர், “மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம்  மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சாரத்துறை ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர்.


தடையில்லா மின்சாரம்:


மழை நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 94 இடங்களில் மின் வாரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்ட மக்களுக்கு மின் விநியோகம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: TN Rain Alert: 4,5ம் தேதிகளில் மக்கள் வெளியில் வரக்கூடாதா? உண்மை என்ன? ஏபிபி நாடுக்கு வானிலை இயக்குனர் பிரத்யேக பேட்டி


மேலும் படிக்க: School Holiday: புயல் எச்சரிக்கை! டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...எந்தெந்த மாவட்டங்கள்?