கோடை சிறப்பு ரயில்
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல பொதுமக்கள் திட்டமிடும் நிலையில், அனைத்து ரயிலிகளிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதன் காரணமாக சிறப்பு ரயில் இயக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் குற்றாலத்திற்கு செல்லும் வகையில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு அந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்
அந்த வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்க சிறப்பு கோடை ரயில்களை இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வாராந்திர சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06043) சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 20, 2026 (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06044) ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். இந்த சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்
மற்றொரு சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் – மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 06041) ஜூன் 21, 2026 (ஞாயிறு) இரவு 9.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.05 மணிக்கு மங்களூருவை அடையும்.(ரயில் எண் 06042) ஜூன் 22, 2026 (திங்கள்) மாலை 3.15 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல திருவனந்தபுரம் – மங்களூரு ஒருவழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், (ரயில் எண் 06093) ஜூன் 20, 2026 அன்று காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 7.45 மணிக்கு மங்களூரு சந்திப்பை அடையும் என கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 06094) மங்களூருவில் இருந்து ஜூன் 20, 2026 அன்று இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு எப்போது.?
இந்த ரயில்களுக்கான முன்பதிவை பொறுத்தவரை ரயில் எண் 06043 மற்றும் 06093 ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு ஜூன் 18, 2026 அன்று பிற்பகல் 2.15 மணி முதல் தொடங்கியுள்ளது. ரயில் எண் 06044, 06094, 06041, 06042 ரயில்களுக்கான முன்பதிவு ஜூன் 19, 2026 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
