தமிழகத்தில் அறிநிலையத்துறை திட்டங்கள்

தமிழக அரசு அறநிலையத்துறை சார்பாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், கிராமக் கோயில் பூசாரிகளின் நலனுக்காக நலவாரியம், அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணிக்கு நியமனம், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மேலும் பக்தர்கள் இலவசமாக காசி- ராமேஸ்வரத்திற்கு ஆன்மிக பயணம், ஆடி மாதம் அம்மன் கோயில் சுற்றுலா, புரட்டாசி மாதம் பெருமாள் கோயில் சுற்றுலா என பல திட்டங்கள் பக்தர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

கோயிலில் நாளை தொடங்கும் சிறப்பு திட்டம்

இந்த நிலையில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டமானது நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

70 வயது பக்தர்களுக்கான சிறப்பு திட்டம்

அந்தவகையில், 2025 -26 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2.000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நாளை (10.11.2025) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சென்னை இணை ஆணையர் மண்டலங்களை சேர்ந்த 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்து, திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

Continues below advertisement

2000 தம்பதியர்களுக்கு மரியாதை

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ், 2,000 மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு ரூ. 2,500 மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.