இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் மொத்தம் 5 பேர் அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.  


அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 மாதங்களுக்குப் பிறகு உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றார். அதன்படி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து அவருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டதோடு, ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின்  இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. 


அமைச்சர் உதயநிதிக்கு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில், அரசு செயலாளர் ஜெகன்னாதன் ஐஏஎஸ், புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட 5 பேரை தற்காலிகமாக நியமித்துள்ளார். 


இதன்படி மூத்த நேர்முக உதவியாளராக இணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநரான பி.மணிராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல இளநிலை நேர்முக உதவியாளராக சதாசிவம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் தலைவர் ஆவார். 


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஜோப்தார் ஆக, பொதுத் துறை மூத்த அலுவலக உதவியாளர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக உதவியாளர்களாக தமிழக சட்டப்பேரவையின் அலுவலக உதவியாளர்கள் அப்பன்ராஜ், கார்த்திக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 




அமைச்சர்கள் துறை மாற்றம்


அமைச்சர் உதயநிதிக்கு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.


சேகர் பாபுவுக்கு கூடுதல் துறை


இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 


அதேபோல, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத் துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது. 


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்குக் கூடுதலாக சீர் மரபினர், காதி, கிராம தொழில் வாரியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் முன்னதாக அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்தது.


அதேபோல அமைச்சர் மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் துறையுடன் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் துறையும் புதிதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.