தமிழக அரசின் புதிய அமைச்சராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) பொறுப்பேற்றுக் கொண்டார். 


தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 



ஆனால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அவ்வப்போது உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற தகவல் மட்டும் வந்துக் கொண்டே இருக்கும். இதை அமைச்சர்களும் உறுதி செய்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 


அதன்படி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். 


இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,  திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


உதயநிதியின் அரசியல் பாதை 


முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை நடிகராகவே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் அறிந்திருந்தனர். கருணாநிதியின் மறைவுக்குப் பின் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளில் களம் கண்ட உதயநிதி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக அரசியல் மேடையில் களம் கண்டார்.


அந்த தேர்தலில் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்தார். அவரின் நகைச்சுவை கலந்த பேச்சு மக்களை பெரிதும் கவர்ந்தது. இதனையறிந்த திமுக தலைமை 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி உதயநிதியை இளைஞரணி செயலாளராக நியமித்தது. தொடர்ந்து இளைஞர் அணியினரை கொண்டு பல நலத்திட்டங்கள் ஆட்சியில் இல்லாதபோதும் செய்தார். குடியுரிமை திருத்த சட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தில் அரசியலில் கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார். 


வாரிசு அரசியல் என முத்திரை குத்தப்பட்டாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல்  2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன் பின்னர் மக்களுக்கான பணிகளை விரைந்து முடித்து பாராட்டுகளை பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல பொறுப்புகளை உதயநிதிக்கு வழங்கி அவற்றை திறம்பட செய்து முடித்து அனைவரிடத்திலும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று  அமைச்சராக உதயநிதி சாதிப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.