சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினம் எமலோகத்தில் நம்முடைய புண்ணியம் மற்றும் பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திரகுப்தனை அவதரித்த தினம் என கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நல்ல காரியங்கள் செய்தால் நம் தலைமுறை நற்பலன்களை பெறும். 


இப்படியான சித்ரா பௌர்ணமி அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மற்ற பௌர்ணமிகளை விட இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி நாளை வருகிறது. 


நாளை அதிகாலை 04.16 மணியளவில் தொடங்கி 24.04.2024 அன்று அதிகாலை 05.47 மணியளவில் நிறைவடைகின்றது. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இதனையடுத்து நேற்று (ஏப்ரல் 22) சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் தினசரி செல்லக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட்டது. அதேபோல் இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று 910 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்றும் 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகிறது. நாளை கூடுதலாக 1600 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. 


கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டணமில்லா குளியல் அறைகள், கழிவறைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.