கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய முக்கிய கோரிக்கையான ஊதிய உயர்வுக்கு, ஒருவழியாக இப்போது வழி கிடைக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழப்பு ஆபத்துச் சவாலையும் எதிர்கொண்டு பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு தங்களின் கோரிக்கை நிறைவேறினால் ஆறுதலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வும் கூடுதல் அலவன்சும் வழங்குவதற்கான ஆணையை சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.


இதன்படி, அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளிலும் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு சிறப்பு ஊதிய உயர்வும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு இரு சிறப்பு ஊதிய உயர்வும் வழங்கப்படும். டி.எம்., எம்.சிஎச். போன்ற சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ஊதிய உயர்வு அளிக்கப்படும்.




இதைத் தவிர, அனைத்து சிறப்புவகை மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம்தோறும் 14ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான அளவில் இருப்பவர்களைக் கொண்ட மயக்கவியல் முதலிய 11 துறைகளில் உள்ள முதுநிலை பட்டதாரி மருத்துவர்களுக்கு 9ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்றும் இதுவே மற்ற மருத்துவர் தட்டுப்பாடு இல்லாத துறைகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி மருத்துவர்களுக்கு 5,500 ரூபாய் மாத ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதைப்போல, தட்டுப்பாடு உள்ள 11 துறைகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டயதாரி மருத்துவர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தட்டுப்பாடு இல்லாத துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.




இவர்களைத் தவிர, தொலைவில் இருக்கும் பகுதிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் போகவர சிரமமாக இருக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு, அவர்கள் சிறப்பு மருத்துவம் படித்திருந்தாலும் அதிசிறப்பு மருத்துவம் படித்திருந்தாலும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்


மேலும், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை, ஒருங்கிணைந்த குழந்தைப்பேறு அவசரச் சிகிச்சை, பிறக்கும்போதே குறைபாடு, சிக்கலுடன் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, பச்சிளம் குழந்தைகளை ஆரோக்கியத்துக்குக் கொண்டுவரும் சிகிச்சை ஆகிய கடினமான பணிகளில் ஈடுபடும் மருத்துவ அலுவலர்களுக்கு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும். கடினமான பகுதிகள், கடினமான பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான படிகளுடன் இது கூடுதலாக வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.