“கடந்த ஆட்சியில் அதிகாரிகள் எல்லோரும் சொகுசாக மாறி விட்டார்கள், யாரும் எதையும் உடனே செய்வதில்லை, அனைத்துக்கும் காரணம் சொல்கிறார்கள், நான் சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கும் ரிங் மாஸ்டர் போல செயல்பட்டு அவர்களிடம் வேலை வாங்க வேண்டியுள்ளது” என ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் பேசி புயலைக் கிளப்பினார். அதாவது அதிகாரிகளில் பலரும் திமுகவின் பிரதிநிதிகள் போல் செயல்படுவதாக குற்றம் சுமத்தினார்.


ஜெயலலிதா எதற்கு சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் இப்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் முக ஸ்டாலினின் நிலையும் ஏறக்குறைய அதுதான். சமீப நாட்களாக பலரும் கேட்கக் கூடிய கேள்வியாக மாறியிருக்கிறது அதிகாரிகளின் ட்ரான்ஸ்பர். குறிப்பாக கடந்த 2 வாரங்களில் மட்டும் ஏகப்பட்ட ஐஏஎஸ் ட்ரான்ஸ்பர். புதிய மாவட்ட ஆட்சியர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களாக இருந்த பலர், துறை சார்ந்த நிர்வாக பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திறமையிருந்தும், சிறப்பாக செயல்பட்டும் கூட ஏதோ சில காரணங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முக்கிய சிலரை தனது அதிகாரிகள் அணியாக மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.




திமுக ஆட்சிக்கு வந்ததுமே பல மாவட்ட ஆட்சியர்கள், முக்கிய துறை செயலாளர்கள், காவல் ஆணையர் பொறுப்பில் இருந்தோர் என பலரும், எப்படியும் ட்ரான்ஸ்பர் வரும், நம்மை இங்கேயே பணியில் இருக்க விடமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தனர். சிலர் வீடுகளை காலி செய்து விட்டு கிளம்பத் தயாரானார்கள். ஆனால் ட்ரான்ஸ்பர் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர்களும் காத்திருக்க ஆரம்பித்தனர். குறிப்பாக கோவை மாவட்ட முன்னாள் அமைச்சரின் சகாக்களாக இருந்த மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நமக்கு எப்படியும் முக்கியத்துவம் இருக்காது என்றே கருதினர். ஆனால் அவர்களுக்கும் ஆச்சரியமே மிஞ்சியது.


ஆட்சி மாறினாலே இதெல்லாம் நடக்கத்தானே வேண்டும், ஏன் நடக்கவில்லை என தலைமைச் செயலக அதிகாரிகளை கேட்ட போது “கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் இப்போதைக்கு யாரையும் மாற்ற வேண்டியதில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என முதல்வர் சொல்லிவிட்டார். அதோடு மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது நாமே தேவையற்ற சிக்கலை ஏற்படுத்துவதாக மாற்றிவிடும் என முதலமைச்சர் சொன்னதாக கூறினார்கள்.


திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே கொரோனா எண்ணிக்கையும் அதிகமானது. தொடர்ந்து எண்ணிக்கை உயர உயர அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கியது முதலமைச்சரின் தனிக்குழு. அப்போது தெரிய வந்ததுதான் அதிகாரிகளின் மன ஓட்டம். இதற்கு மேல் தாமதிப்பது சரியாக இருக்காது என அறிக்கை கிடைத்தது. பல ஆட்சியர்கள் பணியிட மாறுதலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இதற்கு மேலும் அவர்களை மாற்றாமல் வைத்திருந்தால் கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது சாத்தியமாகாது என்பதையும் அறிந்து கொண்டனர்.




இது ஒருபுறம் இருக்க, கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியராக இருந்த பலரும் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள் அல்ல, பதவி உயர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தனர் ஆங்கிலத்தில் Conferred IAS என்பார்கள். சகாயம் ஐ.ஏ.எஸ். போன்று.. இதுவும் சிக்கலை அதிகப்படுத்தியது. மாவட்ட ஆட்சியர்களை தேவை அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகத்தை திறம்பட நடத்தவும் நியமிப்பதை விடுத்து, அமைச்சர்கள் தங்களுக்கு யார் சாதகமாக இருப்பாரோ அவர்களுக்கு ஏற்ற மாதிரி நியமித்ததாகவும் இதனால் மாவட்ட ஆட்சியராக தகுதி பெற்ற பலரும் பதவி கிடைக்காமல் இருந்தனர், அணிகளாக பிரிந்து கிடந்த அதிமுக இணைந்த போது ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமான அதிகாரிகளை தரவில்லை என்ற சங்கடம் இருந்ததை நேரடியாகவே வெளிப்படுத்தினர்” என மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறினார்.


நன்றாக கவனித்து பார்த்திருந்தால் சில முக்கிய ஆட்சியர்களும் காவல்துறை உயரதிகாரிகளும் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டதையும் பார்க்கலாம். அதோடு நேரடி ஐ,ஏ,எஸ். ஐ.பி,எஸ் அதிகாரிகள் பலர் நிர்வாகத்தை கவனிப்பதை விட தங்களை சமூக வலைத்தளங்களில் ப்ரமோட் செய்து கொள்ளும் வேலையையும் அமைச்சருக்கு நெருக்கம் என்பதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை.  நிறைய இளைஞர்களை மாவட்ட ஆட்சிப் பணிக்கு அனுப்பலாம் என பரிந்துரைத்தாலும் அவற்றை யாருமே அப்போது கண்டுகொள்ளவில்லை என மற்றொரு அதிகாரியும் பகிர்ந்து கொண்டார்.


ஊழல் குற்றச்சாட்டு இல்லாத, தகுதி உள்ள இளைஞர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு அனுப்பவதே தற்போதைய சூழலை சமாளிக்கவும் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி சிந்திக்கவும் வழிவகுக்கும் என ஆலோசனை சொன்னது அதிகாரிகள் குழு.  வந்தது அறிவிப்பு, அடிக்கப்பட்டது ட்ரான்ஸ்பர் ஆர்டர். ஐஏஎஸ் தேர்வாகும் அனைவருக்குமே ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஆசை கண்டிப்பாக இருக்கும், அது கிடைக்கும் போது மகிழ்ச்சி அளவில்லாததாக இருக்கும், ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமுமே நீங்கள் எனும்போது மற்ற துறைகளில் இருந்து பணி புரிவதை காட்டிலும் கூடுதல் பொறுப்பும், அதீத கவனமும் தேவை, இப்போது பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என சொன்னார் ஒரு இளம் ஆட்சியர்.




இவற்றோடு மற்றொரு முக்கிய விஷயமாக பலரும் பார்ப்பது மூத்த அதிகாரிகள் பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ். அவரை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமித்துள்ளனர். சாதாரணமாக மாநகராட்சி ஆணையர் பொறுப்பை ஒரு மூத்த அதிகாரிக்கு கொடுக்க மாட்டார்கள். அதுவும் தலைநகரத்தில் பெரும்பாலும் மாநகராட்சி பணிகளை மேற்கொள்ள குறைந்த அனுபவமே போதும். ஆனாலும் ககன் தீப் அந்த பொறுப்பை ஏற்றார். காரணம், கொரோனா மற்றும் ஸ்டாலின்.


அதிகரித்து வந்த கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை முந்தைய ஆணையரால் சரிவர கையாள முடியவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அறப்போர் உள்ளிட்ட அமைப்புகள் வைத்தனர். அதோடு முன்னாள் அமைச்சரின் நெருக்கத்தை வைத்துக் கொண்டே அந்த பணியில் அவர் தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேசி, ககன் தீப் சிங்கை சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பை ஏற்க சொன்னார். அனுபவத்துக்கு ஏற்ற பணியில்லை என்றாலும் அவசியம் என்பதை உணர்த்தினார். அவரின் வரவு மாநகராட்சியில் பணியாற்றிய பல்வேறு இளம் அதிகாரிகளுக்கு தூண்டுதலாக மாற, புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதும் குறிப்பிட வேண்டியது. கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால் ஏதாவது துறையில் வைத்தாக வேண்டிய கட்டாயத்தால் 3 முறை ட்ரான்ஸ்பர் அடித்தார்கள் என்பது பார்க்க வேண்டிய விஷயம்.




பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கைதான் 11 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களாக பெண்களை நியமித்ததும் முக்கிய மாநகர காவல் ஆணையர்களாக பெண் அதிகாரிகளை நியமித்தும் உத்தரவிட்டனர். அதே நேரத்தில் சரியாக செயல்படாமல் இருந்த சில பெண் அதிகாரிகளை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் ட்ரான்ஸ்பர் அடித்துள்ளனர். அதிகாரிகளை மாற்றம் செய்வதை முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பாவிட்டாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதை போல் ரிங் மாஸ்டராக மாறி விடக் கூடாது என்பதை கவனத்தில் வைத்தே அதிகாரிகளை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.


மொத்தமாக பார்க்கும் போது தமிழ்நாடு முழுக்க இளம் ஆட்சியர்களை நியமித்தும் குற்றச்சாட்டுகள் இருந்து சரியாக செயல்படாத ஆட்சியர்கள் பலரை துறை சார்ந்த நிர்வாகத்துக்கும் மாற்றியுள்ளனர். செயல்பாடுகளை வைத்துதான் எதையும் எடை போட முடியும் என்றாலும் தற்போது நடந்துள்ள அனைத்து பணியிட மாற்றங்களும் வேறு வழியின்றி செய்யப்பட்டவை. ஆனால் எதிர்பார்ப்பு உள்ளவை. மேலும் குற்றச்சாட்டுகள் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலருக்கும் முக்கிய பணிகள் ஒதுக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தேர்தல் சமயத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான பலரும் தற்போதும் எந்த சிக்கலுமின்றி தொடர்வது ஐபிஎஸ் அதிகாரிகள் பலருக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது.