செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. சமீபத்தில் கூட ஆளுநருக்கு என்ன அதிகாரம் உண்டு என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. ஒரே ஒரு உரிமை மட்டும் தான் ஆளுநருக்கு உண்டு, சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற்ற ஒருவரை அழைத்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற உரிமை மட்டுமே உள்ளது. அதேபோல், முதலமைச்சர் பதவியேற்ற பின் சட்டபேரவை உறுப்பினர்கள் குறித்து பரிந்துரை வழங்கப்படும் அதனை ஏற்று ஒப்புதல் அளிப்பார். அமைச்சர்  பதவியை அமைச்சர்களே ராஜினாமா செய்யலாம், அல்லது முதலமைச்சர் அமைச்சர்களை பதவி விலக சொல்லலாம். அதை தவிர நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் தானாகவே ராஜினாமா செய்து ஓ பன்னீர்செல்வத்தை தற்காலிக முதலமைச்சராக நியமனம் செய்தார். சட்டமன்றத்தில் சட்டப்பேரவை தலைவர் தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீக்க முடியும். அதேபோல் தான் ராகுல் காந்தி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவருடைய நாடாளுமன்ற பதவியை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் ரத்து செய்தார்” என விளக்கமளித்துள்ளார்.


மேலும், “ ஆளுநர் நல்ல மனிதர், மிகவும் கெட்டிக்காரர். நான் பலமுறை சந்தித்துள்ளேன், அவர் உணர்ச்சிவசப்பட்டு அந்த உணர்வின் வெளிபாடு தான் நேற்று அனுப்பப்பட்ட கடிதம். பல சந்தர்பங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டது உண்டு, அப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது தேசிய கீதத்திற்கு கூட எழுந்து நிற்காமல் சென்றார். தமிழ்நாட்டை  தமிழகம் என்பார்கள் இப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக நடப்பது உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்று ஆனால் இப்படி உணர்ச்சிவசப்பட்டு கூறுவது எப்படி எடுத்துக்கொள்வது? இவை எல்லாம் தண்டைக்குறிய செயலாகும். இதனை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும்” என ஆளுநருக்கு அப்பாவு அறிவுரை வழங்கினார்.  


தொடர்ந்து பேசிய அவர், “பாத்திமா பீவி ஆளுநராக இருந்த போது அன்றைய முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததன் காரணமாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சட்டத்திற்கு புரம்பாக செயல்பட்டார் என கூறி, அமைச்சரவை கூட்டி ஆளுநர் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  இதன் மூலம் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் பணியாற்ற வேண்டிய கடமையும், கட்டாயமும் ஆளுநருக்கு உள்ளது. சட்டத்தின் படி அவர் நடந்துக்கொள்ள வேண்டும், அதுதான் ஆளுநர் வகித்து வரும் பதவிக்கு மாண்பாக இருக்கும். யார் அமைச்சராக இருக்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.