ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய அவர், தேசிய கீதம் உரையின் துவக்கத்தில் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி அதனை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை
தொடர்ந்து நிகழ்வு முடியும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்” என தெரிவித்தார்.
ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பதில்
தேசிய கீதம் இசைத்து தான் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கிறோம். சட்டமன்றத்திற்குள் வந்த உடனே பேரவை விதி 76/1ன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநரை அழைத்து அவரது உரையுடன் தொடங்கப்படுவது மரபாகும். இப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆளுநர் எடுப்பதால் தான் பல மாநிலங்களில் அவர்களை அழைப்பதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் மாண்பு, சட்டத்தை மதிப்பதால் ஆளுநரை அழைக்கிறோம்.
தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் உரைக்கு அனுமதி கொடுத்த பின் தான் பிரிண்ட் செய்யப்படுகிறது. அதைத்தான் வாசிக்கிறார்கள். அதில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி எந்த வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ஒரு பகுதியை அவர் வாசித்து விட்டு பின் கடைசி பக்கத்தை வாசித்து முடித்தார். அதன்பிறகு அவை மாண்புபடி உட்கார்ந்து தேசிய கீதம் இசைக்கும் வரை இருக்க வேண்டும்.
நானும் தலைமை செயலாளரும் அழைக்க சென்றபோது எங்களிடம் எதையும் சொல்லவில்லை. வருகிறேன் என்று தான் சொன்னார். அதேபோல் ஆளுநர் உரையில் நான் சொல்லியதை எல்லாம் நீக்கவில்லை. அதனால் கடைசி பக்கத்தை படிக்கிறேன் என சொல்லாமல் எனக்கு எதுவுமே இதில் பிடிக்கவில்லை என சொல்வது சரியா? தமிழ்நாட்டுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதனை ஏன் அவர் மீற வேண்டும் என சபாநாயாகர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.