தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். தற்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றிவிட்டு ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருக்கிறார்.
தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை:
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை. தேசிய கீதத்தை ஆரம்பத்தில் இசைக்கவில்லை என்று கூறி அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்துள்ளார். இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் வாசித்து வருகிறார்.
ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றாமல் இருப்பதற்கு சட்டப்பேரவையிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னது என்ன..?
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், "தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். உரையின் துவக்கத்திலும் இறுதியிலும் இசைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மற்றும் அறிவுரை வழங்கியுள்ளேன், இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் படிக்கவில்லை. எனவே, இந்த சட்டப்பேரவையை பொறுத்தவரை, நான் எனது உரையை முடிக்கிறேன். இந்த சட்டப்பேரவை மக்களின் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதமாக இருக்க வாழ்த்துகிறேன்” என குற்றச்சாட்டி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை படிக்காமல் புறக்கணிப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து, அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காத சூழல், அதன் தமிழாக்கத்தை வாசித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “ தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு. கணியன் பூங்குன்றனாரின் வரிகளான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,487 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.” என வாசித்து வருகிறார்.