திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இறந்தவர் ஒருவர் உடல் அவரது வீட்டின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய இரு  தினங்களில் அதீத  கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்த நிலையில் அதையும் மீறி மழை கொட்டி தீர்த்தது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த மழையால் இதனால் ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது.


பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் நகரம், கிராமம்  என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. திடீரென தண்ணீர் சூழ்ந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறி போயினர். தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை மிகத் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டனர். 


மேலும் ஹெலிகாப்டர்கள், பைபர் படகுகள், படகுகள் போன்றவை கொண்டு வரப்பட்டு மிகத் தீவிரமாக மீட்பு பணிகள், மக்களை வெளியே கொண்டு வர முடியாத இடத்தில் உணவு , தண்ணீர் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் முழு வீச்சில் இரவு, பகலாக மீட்பு பணிகள் நடக்கிறது. இதனிடையே இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிடுகிறார். 






இப்படியான நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலி எல்லைப் பகுதியில் உள்ள செய்துங்கநல்லூர் அருகே வசித்து வருகிறார். மழை வெள்ளத்திற்கு அவருடைய வீடும், அவர் இருக்கும் பகுதிகளும் தப்பவில்லை. உடனடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து வெள்ள சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


ஆனால், ‘நான் இங்க இயக்குநர் எல்லாம் இல்ல. இது என் ஊரு என் மக்கள். நான் இயக்குநராக இல்லாவிட்டால் கூட இப்படித்தான் மக்களை மீட்டிருப்பேன். வெளியூரில் உள்ள மக்கள் அம்மாவை காணும், அப்பாவை காணும், எங்க ஊரு என்ன ஆச்சுன்னே தெரியலைன்னு சொல்றப்ப அதுமட்டும் தான் எனக்கு தெரியுது. என்னுடைய நம்பர் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு என்பதே பலம் தான். வெட்ட வெளியில் நின்னு பேசுறதுக்கும், தண்ணிக்குள்ள நின்னு தத்தளிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. அந்த வலி, வேதனை அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும்’ என பதிலடி கொடுத்திருந்தார் மாரி செல்வராஜ். 


இப்படியான நிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஒரு இடத்தில் தங்கள் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததால் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முறைப்படி விஏஓவிடம் தகவல் தெரிவித்து விட்டதாக சொன்னாலும் வெள்ளம் சென்று கொண்டிருந்த போதும் இதுபோன்ற உயிரிழப்புகள், மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.