கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய முயற்சியால் வெளிநாட்டு நிறுவனங்களின்  20 ஏஜெண்டுகள் கரூருக்கு வருகை தந்தனர்.


 




ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களில் பல நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள  ஏஜென்சி நிறுவனங்களின் மூலம் தங்களுக்கு தேவையான  பொருட்களை  இறக்குமதி செய்கின்றன.  
இந்தியாவில் உள்ள ஏஜென்சி நிறுவனங்கள், வெளிநாட்டு இறக்குமதியாளர்களின் தேவைக்கேற்ப உற்பத்தியாளர்களை தேர்ந்தெடுத்து, பொருட்களுக்குரிய தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தரம் சரிபார்த்து, சரியான நேரத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்ய, இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருக்கும் இறக்குமதி நிறுவனங்களுக்கும் தொழில் முறை பாலமாக விளங்குகின்றன. கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும்  ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய முயற்சியாக பையிங் ஏஜென்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்போடு கலந்து ஆலோசித்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து ஜவுளி பொருட்களை வாங்கும் 20 ஏஜென்சி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவாக கரூருக்கு 17.12.2023  அன்று  வந்து சேர்ந்தனர். இந்த ஏஜென்சி பிரதிநிதிகள் குழு 18 மற்றும் 19ஆம்  தேதிகளில் கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களை பார்வையிடுகின்றன.


 




 
கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு 15 ஜவுளி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 15 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் 5 கோடிக்கும் குறைவாக உற்பத்தி திறன் உள்ள நிறுவனங்களாகவும்,  5 நிறுவனங்கள் ஐந்து கோடி முதல் 25 கோடி வரை உற்பத்தி திறன் உள்ள நிறுவனங்களாகவும்,  5 நிறுவனங்கள் 25 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 20 பிரதிநிதிகள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஜவுளி நிறுவனங்களுக்கும் சென்று   அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளை பார்வையிட்டு,  அவர்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றியும் தரக்கட்டுப்பாடு மற்றும் ஜவுளி பொருட்களை தயாரிப்பதில் அவர்களின் அனுபவம் மற்றும் திறமைகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.  18ம் தேதி மாலை  கரூர் ரெசிடென்சி ஹோட்டல் வளாகத்தில் ஏஜென்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்த நிகழ்வில் பங்கு கொண்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு கூட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நிகழ்வில் கரூர் ஜவுளி நிறுவனங்களை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  பையிங் ஏஜென்ட் அசோசியேஷன் அமைப்பின்  பொதுச் செயலாளர் தன்யா பாத்தியா அவர்களின் அமைப்பைப் பற்றியும் அதனுடைய செயல்பாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார். சந்தியா சாமுவேல் பையிங் ஏஜென்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன,  ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அதிக ஆர்டர்களை பெறுவதற்கு இது போன்ற திறமைகளை வளர்த்திக் கொள்ள வேண்டும்,  கரூர் ஜவுளி நிறுவனங்களின் திறமைகள் என்ன,  கரூர் ஜவுளி நிறுவனங்களிடம் உள்ள குறைகள் என்ன,  அதை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்று அனைவருக்கும் எடுத்துரைத்தார்.


 




 


 
வருகை புரிந்து இருந்த பிரதிநிதிகளுக்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள்  மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பாக  நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.   இந்நிகழ்வில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன்,  கௌரவ தலைவர் திரு எம் நாச்சிமுத்து,  செயலாளர் திரு சுகுமார்,  இணைச் செயலாளர் திரு  சேதுபதி,  துணைத்தலைவர் திரு   பிரித்வி  மற்றும் பொருளாளர் திரு அசோக் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம், இதில் பங்கு கொண்ட ஜவுளி உற்பத்தி நிறுவனத்திற்கு, ஒரே நேரத்தில்  20 ஏஜென்சிகள் தொடர்பு ஏற்பட்டுள்ளது.   ஒவ்வொரு ஏஜென்சியும் வெளிநாட்டில் உள்ள பல இறக்குமதி நிறுவனங்களோடு வியாபாரம் செய்யும் வாய்ப்புகள் உள்ளது.   இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் இந்நிகழ்வில் பங்கு கொண்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு இனி வரும் காலங்களில் அதிக  உற்பத்தி ஒப்பந்தங்கள்  வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல இங்கு வருகை புரிந்து இருக்கும் ஏஜென்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் எது போன்ற ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து தர முடியும்  என தெரிந்து கொள்ளவும், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிகளை பார்வையிடவும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2030 ஆம் வருடம் 25 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் என்ற இலக்கை  எட்டவும்,  தற்பொழுது தொய்வடைந்திருக்கும் ஜவுளி தொழிலை  மேம்படுத்தவும் இந்த நிகழ்வு பெரும் வாய்ப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.


 


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial