திமுக தரப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் 4,15,557 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.


நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  முதலில் தபால் வாக்குகளும்,  அதனை தொடர்ந்து  பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி தென் சென்னை தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார். 


தென் சென்னை தொகுதி வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள்:


தென் சென்னை மக்களவை தொகுதியில், மொத்தமாக 20,23,133 வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதில், 10,00,851 ஆண் வாக்காளர்களும், 10,21,818 பெண் வாக்காளர்களும், 464 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளது. மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை நாடாளுமன்றத்திற்கு தேர்வானது இந்த தொகுதியில் இருந்து தான். தென் சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மைலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட சட்டம்னற தொகுதிகள் அடங்கும்.


1991 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் தெர்தல் நடைபெற்று வருகிறது.  2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தரப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜக தரப்பில் தமிழிசை சௌந்தராஜன், அதிமுக தரப்பில் ஜெயவர்தன் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் தமிழ்ச் செல்வி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கபட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.


பதிவான வாக்குகள்:


நடைபெற்று முடிந்த தேர்தலில், 10,96,026 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 5,52,089 ஆண் வாக்காளர்களும், 5,43,843 பெண் வாக்காளர்கள், 95 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமாக 54.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 57.07% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.


 தென்சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் மூன்றாவது தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கு முன் தென் சென்னை மக்களவைத் தொகுதியில்  தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


தென் சென்னை தொகுதியில் நிலவும் பிரச்சனைகளும் மக்களின் கோரிக்கைகளும்:


தென் சென்னை தொகுதியில் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக விளங்குகிறது. சில இடங்களில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர்ப் பாதைகளுக்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்துவருகின்றன. தியாகராய நகர் பேருந்து நிலைய விரிவாக்கம், நடைபாதை கடைகள் அகற்றம் இத்தொகுதிகளின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னைகளாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.