திருப்பூர் மாவட்டத்தில் மாமியாரின் தலையை உடைத்த மருமகனின் செயலால், மாமியார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள்தாய். இவருக்கு இசக்கியம்மாள் என்கிற மகள் இருக்கிறார். இசக்கியம்மாள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, சின்னதுரை என்பவரை திருமணம் செய்துள்ளார். இசக்கியம்மாள் - சின்னதுரை தம்பதிக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
நடந்தது என்ன?
இவர்கள் இருக்கும் இடையே, அவ்வப்போது சிறிய அளவிலான சண்டைகள் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் , சின்னதுரையின் மதுப்பழக்கம். இவர், தினமும் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், கணவரின் துன்புறுத்தல்கள் காரணமாக , இச்சக்கியம்மாள் தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூரில் உள்ள மாமியாரின் வீட்டுக்குச் சென்று, மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார், சின்னதுரை. ஆனால் , இசக்கியம்மாள் வர மறுத்திருக்கிறார். மேலும் , மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மகளை தாக்குவதை பார்த்து கோபமடைந்த இசக்கியம்மாளின் தாயார், தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து , தட்டிக்கேட்ட மாமியார் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கிறார் சின்னதுரை. இதையடுத்து, அப்பகுதியை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
மாமியார் மீது தாக்குதல்:
பின்னர், இந்த தாக்குதல் தொடர்பாக சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தாக்குதலுக்குள்ளான பெருமாள்தாயை , கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாள்தாயி தலையில் பலத்தம் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சின்னதுரையை காவல்துறையினர் கைது செய்தனர்.
மனைவியை அழைப்பதற்காக சென்ற கணவர், மாமியாரின் தலையை உடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.