பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு அதிக தொகை ஒதுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை டுவிட்டரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஷேர் செய்துள்ளார்.
அந்தச் செய்தியில், "ஆளுநர்கள் (ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள்) சட்டம் (1982 இல் 43), 1982-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, ஆளுநர்கள் மற்றும் ஆளுநர் மாளிகைகள் செலவழிக்கும் தொகையை நிர்வகிக்கிறது.
பல்வேறு பிரிவுகளில் அதிகபட்ச தொகை ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும். இந்தத் தொகை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கு வாங்கப்படும் பொருட்கள், ஒப்பந்த கொடுப்பனவுகள், ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கான செலவுகள், தோட்டங்களை பராமரித்தல், மின்சார செலவு, தண்ணீர், பொழுதுப்போக்கு, பராமரிப்பு, மரச்சாமான்களை சரிசெய்தல், அலுவலக ரீதியிலான பயணச் செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பராமரிக்க தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆளுநர்களின் பயணம், அலுவலச் செலவுகள் போன்றவற்றிற்கு ரூ.1.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பதிவில், "இந்த தகவல் ஃபிரண்ட்லைன் இதழில் வெளியானது. இது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு இவ்வளவுத் தொகை செலவழிக்கப்படுகிறதா? இது ஆச்சரியத்தை அளிக்கிறது!
உடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவை விமர்சித்த பழனிசாமி
இதனிடையே, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். கருப்பு சட்டை அணிந்தபடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. மக்கள் வயிற்றெரிச்சல், கோபத்தை இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர். 18 மாத திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நன்மை நடந்துள்ளது? என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். திறமையில்லாத முதலமைச்சர். ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு 18 மாத கால ஆட்சியே சான்று. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. கார்பரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழகத்தை ஆட்சி செய்கிறது.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. அவர் கோவைக்கு வரும் போது யாராவது கண்ணாடி வாங்கிக் கொடுத்து அனுப்புங்கள். கோவையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதனை அவர் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். அதிமுக பற்றி பேசும் யோக்கியதை முதலமைச்சருக்கு கிடையாது. அதிமுகவை விமர்சிக்க முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றார் எடப்பாடி பழனிசாமி.