சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து தனியார் பயணிகள் பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கி பாய்ந்து விபத்திற்குள்ளானது. 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து விழுந்த பேருந்த 11 வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த்தும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பணிகளை விரைவுபடுத்தினர். மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருவோரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


 


இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, "69 பயணிகள் பயணித்த பேருந்தில் 5 பேர் உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. மேலும் போதுமான அளவு ரத்தம் இருப்பு உள்ளது இது தொடர்பாக இரத்த நன்கொடையாளர்கள் 10 யூனிட் அளவிற்கு ரத்தம் கொடுத்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் போதிய பரிசோதனை மேற்கொண்டு பின்னர் உரிய சிகிச்சை பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் கூறினார்.


அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர். இதுகுறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


இதனிடையே மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.