நாகபாம்பெனும் நல்லபாம்பு கடித்தால்கூட மருத்துவமில்லாமல் உயிர் பிழைக்கலாம். இங்கு ஏன் இந்த நல்ல பாம்பை குறிப்பிட்டேன் என்றால், நல்லபாம்பை மட்டுமே எளிதில் இங்கு அடையாளம் காண முடியும். காரணம், அது நம்ம வழக்கு மொழியில் சொன்னால் அது, "படமெடுத்து" ஆடுகிறது. அதனால் நமது மனதில் ஆழமாக பதிந்து நிற்கிறது. நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதன் நோக்கம், எதிராளியிடம் நான் உம்மைவிட பெரிய ஆள் எனக் காட்டிக்கொள்வதன் குறியீட்டின் செயல்தான்.

 



 

இனி தலைப்பிற்கு வருவோம். நல்லபாம்பு கடித்தால்கூட உயிர்பிழைக்கலாம் என்பது அது கடிக்கும் சூழலை பொருத்தே உயிர்பிழைக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நஞ்சுள்ள பாம்பின் நஞ்சென்பது அவற்றிற்கு நமது பணத்தைப் போன்றது. அது தேவையில்லாமல் ஊதாரித்தனமாக செலவழிக்காது. நஞ்சின்மூலம்தான் அதன் உணவினைப் பெறக்கூடிய நிலையிலேயே நஞ்சுள்ள பாம்புகள் இருக்கின்றன. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்வோம். மனிதன் ஒருபோதும் நல்லபாம்பின் உணவுப் பட்டியலில் மட்டுமல்ல இங்கு, எந்தவொரு நஞ்சுள்ள பாம்பின் உணவுப் பட்டியலிலும் இல்லவே இல்லை. அதனால் மனிதர்களிடம் தமது விலைமதிப்பான நஞ்சை எப்போதும் விரயம் செய்யவே செய்யாது.

 

பிறகு ஏன் மனிதர்களை பாம்புகள் கடிக்கிறது, உலகிலேயே பாம்புக்கடியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டுமே பாதியளவு எண்ணிக்கையில் ஏன் இருக்கிறது போன்ற கேள்விகள் உங்களிடமிருந்து வரலாம். எதிர்பாராத சூழலில் எதிர்பாராதவிதமாக நஞ்சுள்ள பாம்புகளை பாதிக்கும் விதமாக மனிதர்கள் பலவேளைகளில் அறியாமல் செயல்படுகிற போதே, முட்டுச் சந்தில் சிக்கிக்கொண்ட கணக்காக இரு உயிர்களுக்கும் ஏற்படுகிற சூழலிலேயே பாம்பு நம்மை வேறு வழியில்லாமல் தமது உயிர்காக்கும் பொருட்டு தாக்குகிறது.

 

பிறகெப்படி நல்ல பாம்பின் கடிக்கு பின்னர் உயிர் பிழைக்கலாம் என்கிறீர்களா ? முடிந்தவரை தமது நஞ்சினை செலவழிக்காதென பார்த்தோம். பல சமயங்களில் நம்மை எச்சரிக்கும் விதமாக பொய்க்கடி(Dry bite) என்கிற நஞ்சை உட்செலுத்தாத கடிகளையே கடிக்கும்...

 



 

இந்த மாதிரி சமயத்தில்தான் நமது கைவைத்தியம் உட்பட மந்திரம் உச்சரித்து சிறகடிக்கும் செயலெல்லாம் நல்லபாம்பின் கடியிலும் வெற்றிபெறுகிறது. ஆனால் எல்லா சூழ்நிலையிலும் முதல்கடி பொய்க்கடியாக அமையாது. எந்தக் கடி கடித்தாலும் உடனடியாக மருத்துவமனை செல்வதே மிகவும் முக்கியம். இந்தியாவில் பாம்புகளின் மீதான புரிதல் பெரும்பாலும் இல்லவே இல்லை. பாம்புகடிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாம்புக் கடிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய உயிர்காக்கும் முயற்சிகள் பற்றிய எந்தவொரு அறிவும் இல்லை என்றே சொல்லலாம்.

 

பச்சிலை வைத்தியத்தில் பலன் இல்லையா என நீங்கள் கேட்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பச்சிலை வைத்தியத்தை இருளர் பழங்குடியினர் சிறப்பாக கையாள்வதாக பிரபல பாம்பு நிபுணர் பத்மஸ்ரீ ரோமுலஸ் விட்டேகர் சொல்கிறார். பச்சிலை வைத்தியம்பற்றி முழுமையாக அறிந்தவர்கள் இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? பரவலாக்கப் படாத ஒரு மருத்துவமுறையை பரீட்சித்துப் பார்த்து உயிரோடு விளையாட இங்கு எத்தனை பேர் ஒப்புக்கொள்ள தயாராவார்கள்?