ரேஷன் பொருட்கள் கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்‌ திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. 


அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச் சந்தையில்‌ விற்று அதிக லாபம்‌ ஈட்டும்‌ நோக்கத்துடன்‌ செயல்பட்டு வருகின்றனர்‌. உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ குடிமைப்‌ பொருள்‌ சுற்றப்‌ புலனாய்வுத்‌ துறை அலுவலர்கள்‌ தொடர்‌ ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கலில்‌ ஈடுபடுவோர்‌ / உடந்தையாக செயல்படுவோர்‌ மீது, இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌ 1955 மற்றும்‌ தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின்‌ கீழ்‌ வழக்கு பதிவு செய்து உரிய மேல்‌ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்‌. 


தடுப்பு காவல்


மேலும்‌, தொடர்‌ குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கல்‌ பராமரிப்பு சட்டம்‌, 1980-ன்‌ படி அவ்வப்போது தடுப்பு காவலிலும்‌ வைக்கப்பட்டு வருகின்றனர்‌. இதற்கிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌/ ஆணையாளர்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


’’கடந்த 01.10.2023 முதல்‌ 31.10.2023 வரையிலான ஒரு மாத காலத்தில்‌ கள்ளச்சந்தையில்‌ விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ21,97,070/- (ரூபாய்‌ இருபத்தொரு லட்சத்து தொண்ணூற்று எழாயிரத்து எழுபது மட்டும்‌) மதிப்புள்ள 3474 குவிண்டால்‌ பொது விநியோகத் திட்ட அரிசி, 289 எரிவாயு உருளைகள்‌, 691 கிலோ கோதுமை, 230 கிலோ துவரம்பருப்பு, 660 லிட்டர்‌ மண்ணெண்ணெய்‌, 440 பாக்கெட்‌ பாமாயில்‌, சர்க்கரை 20 கிலோ ஆகியவையும்‌, மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 161 வாகனங்களும்‌ கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. 


குற்றச் ‌செயலில்‌ ஈடுபட்ட 842 நபர்கள்‌ கைது செய்யப்பட்‌டுள்ளனர்‌. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கல்‌ பராமரிப்புச்‌ சட்டம்‌ 1980-ன் கீழ்‌ 4 நபர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ கடத்தல்‌ மற்றும்‌ பதுக்கல்‌ தொடர்பாக பொது மக்கள்‌ 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்‌ தெரிவிக்கலாம்‌ என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’.


இவ்வாறு உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தெரிவித்துள்ளார்.