மின்சார துறை சார்பில் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எவ்வித கட்டணமும் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியினை கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாதிரி ஜோதியினை வழங்கி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். பேரணியானது ஜவகர் பஜார், பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற செஸ் போட்டியினை தொடங்கி வைத்து மாவட்ட முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது தவறான கருத்தாகும். நேற்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மின்வாரிய நிகழ்ச்சியில் நிச்சயமாக வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மின் நுகர்வோருக்கு எந்தவித ஸ்மார்ட் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 35 லட்சம் மின் இணைப்புகளில் 1 கோடி இணைப்புகளுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் 63 லட்சத்து 35 ஆயிரம் பயனீட்டாளர்களுக்கு மாதம் 27 ரூபாயும், 2 மாதத்திற்கு 55 ரூபாய் மட்டுமே கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல. எந்த காரணத்தை கொண்டும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கடந்த அதிமுக ஆட்சியில் 1.54 லட்சம் கோடி கடன் தொகையை உயர்த்தியது யார், அந்த கடன் தொகைக்கு மாதம் 16 லட்சம் கோடி வட்டி கட்டியது யார். 3ல் ஒரு பங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு 3ல் 2 பங்கு மின்சாரத்தை வெளி சந்தையில் அதிக விலைக்கு வாங்கி மின் மிகை மாநிலம் என சொல்லிக் கொண்டனர். விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருந்த போது அவர்களுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மூடக் கூடிய நிலைக்கு சென்று விட்டவர்கள் அதிமுக அரசு.
தற்போது மின் கட்டணம் உயர்விற்காக போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை. அதை கேட்டு போராட்டம் நடத்த திராணி இல்லை.அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை” என்றார்.