Udhayanidhi: கன்னியாகுமரியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். 


திமுக நிகழ்ச்சி:


திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க, கன்னியாகுமாரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அரசின் விளையாட்டு அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.


உதயநிதி பேச்சு:


நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுகவில் 23 அணிகள் உண்டு. கழகத்தின் முதன்மை அணி என கலைஞராலும், முதலமைச்சராலும் பாராட்டப்பட்ட அணி இளைஞரணி. இளைஞரணி 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாநாட்டை 2017- ல் கலைஞர் தலைமையில் தலைவர் ஸ்டாலின் நெல்லையில் நடத்தினார். 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும்.


அதிமுகவை விமர்சித்த உதயநிதி..!


2 மாதம் முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தயிர் சாதமா, புளி சாதமா என தெரியவில்லை. மாநாடு எதற்காக நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மிமிக்ரி, ஆடல்பாடல், பட்டப்பெயர் வழங்கும் நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடந்தன. கட்சிகொள்கை, இயக்க வரலாறு, இயக்க தலைவர்கள் பற்றி பேசவில்லை. ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என நடந்ததுதான் மதுரை மாநாடு. இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலம் மாநாடு நடக்க வேண்டும்.


அரசின் சாதனைகள்:


ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம். 1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான இந்த திட்டத்தை பக்கத்து மாநிலங்கள் பாராட்டுகின்றன.  தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமான அனைத்து மகளிருக்கும் கலைஞர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒரு கோடியே ஆறு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு அதனை வழங்கி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு.


பாஜகவை சாடிய உதயநிதி:


மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் திமுக பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.  மத்திய ஆட்சியில் விமான நிலையங்கள், சாலை, ரயில்வே என அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுத்து விட்டார். ஒரு தனியார் துறை எப்படி 9 வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது. ரமணா படத்தில் இறந்து போனவருக்கு ஆபரேஷன் செய்ய சொன்னதுபோன்று, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில்  இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள்.


ஈபிஎஸ் மீது விமர்சனம்:


பாதம் தாங்கி பழனிசாமி. அவர் பிரதமர், அமித்ஷாவின் பாதங்களை தாங்கி வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம். நீட் தேர்வு திமுக பிரச்சனை இல்லை. அனைத்து மாணவர்களின் கல்வி உரிமை பிரச்சனை ஆகும். பா.ஜ.க கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்து விட்டது. இப்போதாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும். கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன். ஆனால், நீட் ரத்து கையெழுத்து மிகப்பெரிய நாடகம் என்கிறார் பழனிசாமி. உண்மையான நாடகக்காரர் யார் என சசிகலா, பன்னீர்செல்வத்திடம் கேட்டால் தெரியும்.


”முத்தாய்ப்பாய் சேலம் மாநாடு”


சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும். இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.