திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பாலியல் வழக்கில் கைதான சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர்.


இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.




இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபா டெல்லியில் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
 


இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து நேற்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நேற்று   செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.




இதனைத் தொடர்ந்து இன்று திடீரென்று அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சிவசங்கர் பாபா தரப்பில் இருந்து தனக்கு மருத்துவ தேவைக்காக தான் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது