சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நிபந்தனை வழங்கி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவசங்கர் பாபா மீது இதுவரை 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் என மொத்தமாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் மீது ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஆரம்பத்தில் தள்ளுபடி செய்தன. இந்த வழக்குகளில் 4 போக்சோ வழக்குகளுக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றமும், 2 வழக்குகளுக்கு கூடுதல் மகிளா அமர்வு நீதிமன்றமும் ஜாமீன் வழங்கி இருந்தது. முதல் போக்சோ வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கில் அவருக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இதனையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென சிவசங்கர் பாபா தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு
ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் வெளிநாடு செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும், எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிபந்தனை ஜாமீன்
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் வாதங்களையும் கவனத்தில் கொண்ட நீதிபதிகள், சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது, கேளம்பாக்கம் பள்ளி மற்றும், மடத்திற்கு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவதாகவும், நிபந்தனைகள் மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இதனால், சிவசங்கர் பாபா தன் மீதுள்ள 8 வழக்குகளில் 7 வழக்குகளுக்கு ஜாமீன் வாங்கியிருந்தார். கடைசி வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
என்னென்ன நிபந்தனைகள்
அதன்படி, பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், விசாரணை அதிகாரிக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு 8 வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.