சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று (17-10-2023) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அரசு அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் பலி இரண்டு பேர் காயம் சம்பவ இடத்தில் தென் மண்டல டிஐஜி ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி அருகே உள்ள ரங்கபாளையம் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக கணேஷ்கர் பட்டாசு விற்பனை நிலையம் மற்றும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 15 மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் பட்டாசு விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக பட்டாசுகளை சோதனை செய்ததில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்து வந்த சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்ப கோட்டை, விருதுநகர் என நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டே இருப்பதால் தீயை அணைப்பது சிரமம் ஏற்பட்டு வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீ கட்டுக்குள் கொண்டு வாரமல் உள்ளது. தீ விபத்தில் உடல் கருகி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பெண்கள் ஒரு ஆண் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன், தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டனர்.