காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தில் படியில் தொங்கிய மாணவனை மேலே வர சொன்ன நடத்துனரை திட்டி விட்டு,  பேருந்தில் இருந்து கீழே இறங்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கி மாணவன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் கூடுதல் பேருந்து

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் - உத்திரமேரூர்  வழித்தடத்தில் (கீழ்ரோடு )  பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து  மூலம்  மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி நேரங்களிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி கூடுதல் பேருந்து குறைந்த தூரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



 

பள்ளி மாணவர்களும் பயணித்து வந்தனர்

 

இந்நிலையில் இன்று T - 34 என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 5 ,10 மணி அளவில் ஓட்டுனர் திருஞானசம்பந்தம் மற்றும் நடத்துனர் சிவக்குமார் மற்றும் 50- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து புறப்பட்ட நிலையில் இதில் பள்ளி மாணவர்களும் பயணித்து வந்தனர்.

 

நடத்துனருடன் வாக்குவாதம் 

 

கீரை மண்டபம் அருகே பேருந்து நடத்துனர் சிவக்குமார் பேருந்து பின்பக்க படியில் பயணம் செய்த மாணவர்கள் சிலரை மேலே ஏறி வர சொல்லியுள்ளார். சிலர் மேலே வந்த நிலையில் ஒரு மாணவன் மட்டும் அங்கேயே நின்று கொண்டு நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

பேருந்து மீது கல் எறிந்த 

 

திடீரென பேருந்தில் இறங்கி சாலையில் இருந்த கற்கள் எடுத்து பேருந்து பின்பக்க கண்ணாடி மீது வேகமாக வீசியதில் பேருந்தின் கண்ணாடி சுக்கு நூறாக சிதறியது. இதை சற்றும் எதிர்பாராத பிரிந்து உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர்.



 

ஆட்டோவில் ஏறி தப்பி

 

அதற்குள் மாணவன் சுதாரித்துக் கொண்டு சாலையில் வந்த ஆட்டோவில் ஏறி தப்பி ஓடினான். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கீழ் கேட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கொண்டு மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே பலமுறை காவல்துறை போக்குவரத்து துறை எச்சரிக்கை நிலையிலும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பின்றி படியில் தொங்கியவரே பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.